தமிழகம்

தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர்!

வேட்டையன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர். தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் அந்தக் கட்சியில் ஐக்கியம் ஆனார்.

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை - வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜே.சி.டி பிரபாகர். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே முரண்பாடு ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்நிலையில், தற்போது தவெகவில் அவர் இணைந்துள்ளார்.

“முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை, தற்போது விஜய்யை சந்தித்தபோதும் பெற முடிந்தது. கட்சி பொறுப்பு ஏதும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தவெகவில் இணைத்துள்ளேன்.

அதிமுக ஒருங்கிணைப்புக்கு முயன்றேன். அது நடைபெறவில்லை. இனி அந்த முயற்சி வெற்றி பெறாது. வரும் நாட்களில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள். தமிழகத்தில் மக்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது” என்று பேட்டி ஒன்றில் ஜே.சி.டி பிரபாகர் பேட்டி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்தார். அதன் பின்னர் அதிமுக முகாமில் இருந்து பலர் தவெக பக்கம் வருவார்கள் என அவர் சொல்லியிருந்த நிலையில், ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்துள்ளார். ஜே.சி.டி பிரபாகரின் மகன் அமலன், தவெகவில் ஏற்கெனவே இணைந்து கட்சி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT