சிங்கை ராமச்சந்திரன், முதல்வர் விஜய்
சென்னை: ‘உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்’ என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் ட்வீட் செய்துள்ளார்.
அதிமுக சார்பில் கடந்த மக்களவை தேர்தலில் (2024) கோவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் சிங்கை ராமச்சந்திரன். அந்த கட்சியின் மாணவர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அவர், கடந்த ஜூலை 23-ம் தேதி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தனது முடிவை அப்போது சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆக.11) தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்தார். முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, அக்கட்சியில் அவர் இணைந்தார்.
“தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்” என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் சிங்கை ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் (ராஜினாமா செய்த பின்) என பலரும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தங்களது அரசியல் பயணத்தை தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.