சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் கடந்த 59 ஆண்டுகளில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடாததால், அக்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் இந்த முறை 7 தொகுதிகள் திமுகவுக்கும், மதுரை தெற்கு தொகுதி மதிமுகவுக்கும், உசிலம்பட்டி, மேலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியினர் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியைத்தான் கேட்டனர். ஆனால், அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கட்சியினர் விரக்தியடைந்து தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியதாவது: 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது. 1964-ல் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டு புதிதாக இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) உருவானது. பின்னர் நடந்த 1967 தேர்தல் முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தனித்தோ, கூட்டணியிலோ ஏதேனும் ஒரு தொகுதியிலாவது மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
1967-ல் மதுரை கிழக்கில் கே.பி.ஜானகியம்மாளும், மதுரை மேற்கில் என்.சங்கரய்யாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1980-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து மதுரை கிழக்கில் என்.சங்கரய்யா வெற்றிபெற்றார்.
தொகுதி மறுவரையறைக்கு முன்பு இருந்த மதுரை மேற்கில் (தற்போது வடக்கு) என்.சங்கரய்யா ஒருமுறையும், அதேபோல் அப்போதைய மதுரை கிழக்குத் தொகுதியில் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, என்.நன்மாறன் ஆகியோர் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொகுதி மறுவரையறைக்குப் பின்பு 2011-ல் உருவான மதுரை தெற்கில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அண்ணாதுரை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டது. 2026 தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.