தமிழகம்

தமிழகத்தில் வேகமாக பரவும் ஃப்ளூ காய்ச்சல் - வரும் முன் எப்படி காப்பது? வந்தால் என்ன செய்வது?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: 'நேற்று வரை நன்றாக இருந்தேன். இன்று எழுந்திருக்கவே முடியவில்லை' என்று கூறும் வகையில் சில காய்ச்சல்கள் இப்படித்தான் நம் அன்றாட வாழ்க்கைக்குள் திடீரென நுழைகின்றன.

ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அவரை பார்த்துக்கொள்வதற்காக இன்னொருவரின் வேலைகளும் நின்றுவிடுகின்றன. வீட்டில் குழந்தையோ முதியவரோ இருந் தால் கவலை அதிகரிக்கிறது. இத்தகைய காய்ச்சலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் பருவகால ஃப்ளூ.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் இந்தச் சுவாசப் பாதை தொற்றிலிருந்து பெரும்பாலானவர்கள் சிக்கலின்றி குணமடைகிறார்கள். ஆனால் சிலருக்கு நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்றை ஏற்படுத்தலாம். ஏற்கெனவே உள்ள ஆஸ்துமா, இதய நோய் போன்றவற்றை மோசமாக்கலாம்.

இதுகுறித்து அரசு மருத்துவ மனை நுரையீரல் மருத்துவ நிபுணர் இளம்பரிதி கூறியதாவது: தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் தொற்று ஆண்டு முழுவதும் ஏற்படலாம். சென்னை, வேலூர் போன்ற பகுதிகளில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், வடகிழக்குப் பருவமழையையொட்டி பாதிப்புகள் அதிகரிக்கும். இந்த பாதிப்பு காலம், இடத்துக்கு ஏற்ப மாறலாம்.

மழையில் நனைவதால் மட்டுமே ஃப்ளூ வந்துவிடாது. வைரஸ் தொற்றே இதற்குக் காரணம். வழக்கமான சளியைவிட ஃப்ளூ சற்று வேகமாக நம்மை சோர்வடைய செய்யும். திடீரென காய்ச்சல், குளிர்நடுக்கம், தலைவலி, உடல்வலி, கடுமையான சோர்வு ஏற்படலாம். இருமல், தொண்டைவலி, மூக்கடைப்பு அல்லது மூக்கொழுகுதலும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கும் சில நேரங்களில் ஏற்படும். அதே சமயம், ஃப்ளூ உள்ள அனைவருக்கும் காய்ச்சல் இருக்கும் என்று சொல்ல முடியாது. அறிகுறிகளை மட்டுமே வைத்து மற்ற சுவாசத் தொற்றுகளிலிருந்து இதை பிரித்தறிய முடியாது.

பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் உடல்நிலை மேம்படத் தொடங்கும். இருமலும் சோர்வும் இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம். ஆனால் கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறு குழந்தைகள், நீண்டகால நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் அறிகுறிகள் தோன்றியதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மூச்சுத்திணறல் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கக் கூடாது. அறிகுறிகள் தொடங்கிய முதல் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சையை தொடங்குவது அதிக பயன் தரும்.

மூச்சுவிடச் சிரமம்,நீடித்த நெஞ்சுவலி, குழப்பம், எழுப்ப முடியாத அளவுக்குத் தூக்கம், உதடுகள் நீலமாக மாறுதல் போன்றவை உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அறிகுறி களாகும். திரவங்களை அருந்த முடி யாமல் சிறுநீர் மிகவும் குறைவது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை.

குழந்தைகளிடம் வேகமான சுவாசம், மூச்சுவிடும்போது நெஞ்சுப்பகுதி உள்ளிழுத்தல், பால் குடிக்க முடியாமை, வழக்கத்துக்கு மாறான சோர்வு ஆகியவை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குட்பட்ட குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குணமாகி வருவது போலத் தோன்றி, மீண்டும் காய்ச்சல் அல்லது இருமல் அதிகரித்தாலும் மருத்துவப் பரிசோதனை அவசியம். காய்ச்சல் மூன்று அல்லது நான்கு நாட்களை கடந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு போதிய ஓய்வும், தூக்கமும் தேவை. தண்ணீர், சூப், கஞ்சி, ரசம் போன்றவற்றை உடலுக்கு ஏற்றபடி எடுத்துக்கொள்ளலாம். வெதுவெதுப்பான பானங்களை அருந்துவது தொண்டைக்கு இதமளிக்கும்.

மருத்துவர் இளம்பரிதி

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும். பெரியவர் களுக்கும் தேன் கொடுப்பதன் மூலம் இருமலை ஓரளவு தணிக்கலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது. பெரியவர்கள் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு பாராசிட்டமால் மருந்தை அறிவுறுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தலாம். சளிக்கான கூட்டு மருந்திலும் அதே மருந்து இருக்கக்கூடும் என்பதால், ஒரே மருந்தை இருமுறை எடுத்துக்கொள்ளாமல் கவனிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. பாக்டீரியா தொற்று சேர்ந்திருக்கலாம் என்று மருத்துவர் கருதினால் அவை தேவைப்படலாம். பழைய மருந்துச் சீட்டைப் பார்த்துத் தானாக ஆன்டிபயாட்டிக் அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தொடங்க வேண்டாம்.

காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதைப் போலவே, அது வருவதற்கு முன்பு எவ்வாறு தடுப்பது என்பதும் முக்கியம். ஆண்டுதோறும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற ஆபத்துகளை குறைக்க உதவுகிறது.

வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், மருந்து வாங்குவதற்கும் ஓய்வெடுக்கச் செய்வதற்கும் நாம் உடனே ஏற்பாடு செய்கிறோம். அதே அக்கறையை நோய் வருமுன்பும் காட்டலாம். அடுத்த முறை குடும்ப மருத்துவரைச் சந்திக்கும்போது, வீட்டில் யாருக்கெல்லாம் ஃப்ளூ தடுப்பூசி தேவை என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அந்தச் சிறிய முன்னேற்பாடு, குடும்பத்தின் பல கவலைகளைக் குறைக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT