கோவையில் பெய்த கனமழையால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்தது.
படங்கள்: இரா.கார்த்திகேயன்
கோவை: கோவை மாநகரில் வெளுத்து வாங்கிய மழையால், பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் தத்தளித்தனர். மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கோவையில் கடந்த ஒருவார காலமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோவை மாவட்டத்துக்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பகலில் மாநகரின் பல்வேறு இடங்களில் இடியுடன், கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அவை மழைக்கேற்ப போதிய அளவில் இல்லாத சூழல் இருப்பதால், பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. கோவை மாநகரின் பிரதானமான சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள வீதிகளில் மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து ஆறு போல் ஓடியது.
அதேபோல் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியிலும் மழைநீருடன் சாக்கடை நீர் தேங்கியதால், பயணிகள் மழைக்கு கூட ஒதுங்க முடியாமல் நிழற்குடைக்கு வெளியே மழையில் தவித்தபடி காத்துக்கொண்டிருந்தனர்.
அதேபோல் காமராஜர் சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு முன்பாக மழைநீருடன், சாக்கடை நீரும் சேர்ந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
புலியகுளம் கருப்பராயன் கோயில் குடியிருப்பில் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பெண்.
கோவை பந்தய சாலை காவல் நிலையம் பகுதியிலிருந்து தனியார் திரையரங்க பகுதி மற்றும் பந்தய சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சாக்கடை நீருடன் கலந்து சென்ற மழைநீரால் சாலையெங்கும் துர்நாற்றம் வீசியது. சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் பகல் 3 மணிக்கே வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் இயக்கினர்.
கோவை திருச்சி சாலை சவுரிபாளையம் பிரிவு பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.வின்சென்ட் சாலை ஹவுசிங் யூனிட் பகுதியிலும் வெள்ளம், வீடுகளுக்குள் புகுந்தது.
சுங்கம் நிர்மலா கல்லூரி ரெட்பீல்ட் பகுதியிலும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. அதேபோல் புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
சுங்கம் பகுதியில் கார்மல் கார்டன் பள்ளி பகுதியில் மழைநீர் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் சிரமப் பட்டனர்.
பந்தயசாலை பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் பகல் நேரத்தில் விளக்குகளை ஒளிரவிட்டபடி இயக்கிய வாகன ஓட்டிகள்.
போத்தனூர் கருணாநிதி நகர், வின்சென்ட்சாலை, அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு, உக்கடம் பேருந்து நிலையம், மாநகரில் தெற்கு மண்டலம் 60 அடி சாலை, ஹவுசிங் யூனிட் மற்றும் செல்வபுரம், போத்தனூர் பிரதானமான சாலை,பேரூர் சாலை, அவிநாசி பாலம் கீழ் பகுதி என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
நஞ்சுண்டாபுரம் சாலை ஐஓபி வங்கி தனியார் அபார்ட்மென்ட் வாகனம் நிறுத்துமிடத்தில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேயங்கியது.
கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
லங்கா கார்னரில் சிக்கிய பேருந்து
கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் நேற்று மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்களை இயக்க முடியவில்லை.
இந்நிலையில் அந்த வழியாக வந்த அரசுப்பேருந்து மழைநீரில் சிக்கியதால், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளை மீட்டு அனுப்பினர். லங்கா கார்னரில் தண்ணீரை வெளியேற்றும் இயந்திரங்களில் ஒன்று பழுதானதால் தண்ணீர் அப்பகுதியில் தேங்கியது.
கோவை தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, “வெள்ள லூர் பகுதியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது. உயிர் சேதம் எதுவுமில்லை.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து வரும் அழைப்புகளை வைத்து ஆங்காங்கே நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்” என்றனர்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் தாரா (55). இவர் வாடகை இருசக்கர வாகனத்தில் நேற்று வடகோவையில் இருந்து காந்திபுரத்தை நோக்கி சென்ற போது கிராஸ்கட் சாலையில் குடிநீர் திட்டப்பணிக்கு தோண்டிய குழியில் விழுந்து இறந்தார்.
வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்
கோவை அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த 150 நோயாளிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
கோவை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட மழை அளவு கருவிகளில் டவுன்ஹால் பகுதியில் 98 மிமீ,ஆர்.எஸ்.புரம் பகுதியில் 76 மி.மீ.என நேற்று பகல்1 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பொது மக்களின் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார்,மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.