தமிழகம்

சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் இயந்திர கோளாறால் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் இரவு 10.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு, பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். வழக்கம் போல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல விமானம் புறப்பட தயாரானது.

விமானத்தில் 310 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 322 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, இழுவை வண்டி மூலம் விமானம் இழுத்துவரப்பட்டு புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது. விமான தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

ஓட்டல்களில் தங்கினர்: விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் சென்று விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானத்தின் பழுது உடனே சரிசெய்ய முடியாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தின் பழுது சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள, பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT