சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்.11) சென்னை வருகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி- வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவிலான சேவையைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் முதல்வர் விஜய்யுடன் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்கிறார்.
மேலும் ஐஐடி-யில் இயங்கி வரும் 10-க்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிறுவனர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் `இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை' பிரதமர் திறந்து வைக்கிறார். பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
`அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில், மேம்படுத்தப்பட்ட பழநி, பரமக்குடி, நாமக்கல், அம்பா சமுத்திரம், வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள், கோவை பகுதியில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ. புதிய ரயில் பாதை என ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அது மட்டுமல்லாமல் விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை, சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து அண்ணா பல்கலை. வரை `ரோடு ஷோ' செல்கிறார்.
பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக 11-ம் தேதி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதோடு இந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கருவிகள் பறக்கவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் அனைத்து பகுதிகளும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்கியுள்ளவர்கள் குறித்தும், முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.