

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், குரோம்பேட்டை, மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்காக, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஜெட்ராடிங் வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமல், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மும்மூர்த்தி நகரிலும் ஒரு வாகனம் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கத் தகுதியான ஓட்டுநர்கள் நியமிக்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 3 ஆண்டுகளாக வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பருவமழையின்போது பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், அதை உடனடியாக அகற்றுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த வாகனங்களை புதுப்பித்து எப்.சி. செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.