சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக கூடுதலாக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாம்பரம் - திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து ஜன.13, 20 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06058) புறப்பட்டு, அதேநாள் மதியம் 2 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து ஜன.13, 20 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06057) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஜன.14-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06154) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து ஜன.14-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06153) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஜன.12, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு ரயில் (06166) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து ஜன.12, 19 ஆகிய தேதிகளில் மாலை 4.40 மணிக்கு சிறப்பு ரயில் (06165) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலி செல்கிறது.
சென்ட்ரல் - தூத்துக்குடி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (06151) புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து ஜன.13, 20 ஆகிய தேதிகளில் மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சாத்தூர் வழியாக தூத்துக் குடிக்கு செல்கிறது.
முன்பதிவு தொடக்கம்: இந்த 4 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜன.8 (இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதுதவிர, போத்தனூர் - சென்னை சென்ட்ரல் இடையே ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.