

சென்னை: ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட் பெயரை மாற்றி அளவை குறைத்து விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கத்தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: ஆவின் நிர்வாகம், நான்கரை சதவீத கொழுப்புச்சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சைநிற பால் பாக்கெட்டை அதாவது, கிரீன் மேஜிக் பெயரை மாற்றி 500 மிலி பாக்கெட்டில் 50 மிலி அளவை குறைத்து, லிட்டருக்கு ரூ.11 வரை விற்பனை விலையை உயர்த்தி தஞ்சாவூரில் விற்பனை செய்துள்ளது.
இது தமிழகம் முழுவதும் விரைவில் அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே உள்ள பாலில் கொழுப்பு சத்து மற்றும் அளவை குறைத்து விற்பனை விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களுக்கு உயர்த்திவிட்டு, அதன் அடிப்படையில் விற்பனை விலையை உயர்த்தினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஊழல் செய்வதற்காகவும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையிலும் மறைமுகமாக விலை உயர்வை திணிக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் நிர்வாகம் மறுப்பு: இந்நிலையில் இதனை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தினசரி ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் தினசரி 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள், 200 ஆவின் பாலங்கள் மற்றும் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆவின் பால் அனைத்து பகுதியிலும் தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.