படம்: எஸ்.சத்தியசீலன்

தமிழகம்

முதல்கட்ட தபால் வாக்குப் பதிவு விறுவிறுப்பு: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னையில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. போலீஸார் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் பணிக்காக காவலர்கள், ஊர்க் காவல் படையினர் உட்பட மொத்தம் 22,248 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2 கட்டமாக தபால் வாக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டன.

அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதற்காக, வில்லிவாக்கம், அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காவலர்கள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றதோடு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டன.

விடுபட்ட காவலர்களுக்கான 2-ம் கட்ட தபால் வாககுப்பதிவு நாளை (20-ம் தேதி) நடைபெற உள்ளது. "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் 100 சதவீதம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். யாரும் விடுபடாமல் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று சென்னை மாநகரக் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT