சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் தீப்பிடித்ததில் ஆவணங்கள், கம்ப்யூட்டர் சேதமடைந்தன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் சென்னை காவல் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. 8 தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தில் காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
2-வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு உள்ளது. இந்நிலையில், இந்த தளத்தில் இருந்து நேற்று காலை 7 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. போலீஸார் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள், சில ஆவணங்கள், கம்ப்யூட்டர், பர்னிச்சர் பொருட்கள் ஆகியவை சேதமடைந்தன.
மின்கசிவால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து வேப்பேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.