சாத்தான்குளம் வழக்கில் 9 போலீஸாருக்கும் அதிகபட்ச தண்டனை: மத்திய அரசு மனுவில் தகவல்

சாத்தான்குளம் வழக்கில் 9 போலீஸாருக்கும் அதிகபட்ச தண்டனை: மத்திய அரசு மனுவில் தகவல்
Updated on
1 min read

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸார் 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.

கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் போலீஸார் தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் விசாரித்து 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.

பின்னர் இவர்களுக்கான தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும், 9 பேரின் உடல் நிலை, மனநிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி மாநில அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் சிபிஐ தரப்பிலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் தரப்பிலும், ‘அரிதினும் அரிதான வழக்காக கருதி 9 பேருக்கும்தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது.

மனுதாரர் சார்பில் ‘தந்தை, மகன் இருவரும் திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை. திடீர் ஆத்திரம் காரணமாக நடந்த சம்பவத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. பின்னர் 9 பேருக்கும் ஏப். 6-ல் தண்டனை அறிவிக்கப்படும் என்று கூறி விசார ணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

பாரபட்சம், கருணை காட்டக் கூடாது

இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் மின்னஞ்சல் வழியாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சாத்தான்குளம் கொலை வழக்கு போலீஸ் காவல் மரணமாகும். இதில் குற்றவாளிகளுக்கு பாரபட்சம், கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் 9 போலீஸாருக்கும் அதிகபட்ச தண்டனை: மத்திய அரசு மனுவில் தகவல்
லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in