சென்னை: சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும் தமிழகத்தைச் சேர்ந்த 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சத்துக்கான நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காகவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும் சென்னையில் 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
அதன்படி தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற ஜ.கோகுலபாண்டியன், வீ.நவீன்குமார், ஜா.சுஜி மற்றும் கா.யாமினி ஆகியோருக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.1.35 லட்சம், வில்வித்தை வீரர்கள் ப.சதீஷ்குமார் மற்றும் ர.பிரதீஷ்வரன் ஆகியோர் உபகரணங்கள் வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம், பிப்ரவரி மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் பி.பிரதீப்புக்கு ரூ.2.50 லட்சமும், ஆசிய ரோடு சைக்கிளிங் போட்டியில் பங்கேற்கும் ர.சஞ்சய்க்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் க.தீபிகா, சு.பவித்ரா, ம.சுவாதி, அ.தர்ஷினி, வி.ராஜேஷ், பரத், செ.அபிதன், உ.பூந்தமிழன் ஆகியோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் சத்யபிரத சாஹு, ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.