‘எழுத்தாளர் பெருமாள்முருகன் அகவை-60’- ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் உரையாற்றினார். உடன், கல்லூரியின் இணை பேராசிரியர் சீ.ரகு, முதல்வர் இரா.ராமன். எழுத்தாளர் பெருமாள்முருகன், இணை பேராசிரியை பி.எழிலரசி. | படம்: எஸ்.சத்தியசீலன். |

 
தமிழகம்

எழுத்தாளர்களை கவுரவிக்க வேண்டும்: நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: எழுத்​தாளர்​களை தமிழ்ச்​சமூகம் கவுரவிக்க வேண்​டும் என்று சென்னை மாநிலக் கல்​லூரி விழா​வில் நிதித்துறை செயலர் த.உதயச்சந்​திரன் வேண்​டு​கோள் விடுத்​தார்.

சென்னை மாநிலக்​கல்​லூரி தமிழ்த்​துறை மற்​றும் ஆங்​கிலத்​துறை சார்​பில் ‘எழுத்​தாளர் பெரு​மாள்​முரு​கன் அகவை-60-' என்ற தலைப்​பில் ஒரு​ நாள் பன்​னாட்டு கருத்​தரங்​கம் நேற்று நடை​பெற்​றது.

இதில், பெரு​மாள்​முரு​க​னின் படைப்​பு​கள் தொடர்​பாக பல்​வேறு கோணங்​களில் 60 பெண்​கள் எழு​திய 60 கட்​டுரைகளின் தொகுப்பான ‘நன​விலி​யின் நிலம்' என்ற நூல் வெளி​யிடப்​பட்​டது. மாநிலக் கல்​லூரி​யின் முதல்​வர் (பொறுப்​பு) இரா.​ராமன், இணை பேராசிரியர்​கள் சீ.ரகு, ந.பழனியப்​பன், முனை​வர் பட்ட ஆய்​வாளர் இரா.மோக​னவசந்​தன்.

ஆகியோரின் தொகுப்​பில் உரு​வான இந்​நூலை காலச்​சுவடு கண்​ணன் வெளி​யிட, முதல் பிர​தியை தமிழ்த்​துறை இணை பேராசிரியை பி.எழிலரசி பெற்​றுக்​கொண்​டார்.

தொடர்ந்து பல்​வேறு தலைப்​பு​களில் நடை​பெற்ற இலக்​கிய அமர்​வு​களில் பேராசிரியர் வில்​லி​யம் ஜான் போஸ்​கோ, எழுத்​தாளர் அ.மங்​கை, இணை பேராசிரியர் கோ.ரகுப​தி, எழுத்​தாளர் ஜனனி கண்​ணன், வழக்​கறிஞர் அ.அருள்​மொழி உள்​ளிட்​டோர் பங்​கேற்று உரை​யாற்​றினர். மாலை​யில் நடை​பெற்ற கருத்​தரங்க நிறைவு​விழா​வில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் உதயச்சந்​திரன் தலைமை உரை​யாற்​றி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: நான் 22 வயதில் ஐஏஎஸ் அதி​காரி ஆகி​விட வேண்​டும் என்ற கனவுடன் சென்​னை​யில் அலைந்​து​

கொண்​டிருந்த கால​கட்​டம் அது. பொறி​யியல் படித்​தவ​னான நான், சிவில் சர்​வீஸ் தேர்​வில் மானுட​வியல், தமிழ் இலக்​கி​யம் ஆகிய​வற்றை விருப்​பப் பாடங்​களாக தேர்வு செய்​திருந்​தேன்.

அப்​போது பேராசிரியர் பெரு​மாள்​முரு​க​னின் ஆலோ​சனை​கள் எனக்கு மிக​வும் உதவி​கர​மாக இருந்​தன. அன்​றி​லிருந்தே எங்​களின் இலக்​கிய பயணம் தொடர ஆரம்​பித்​தது. தமிழகத்​தில் மாவட்​டம்​தோறும் புத்​தகக் காட்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன.

சென்​னை​யில் பன்​னாட்டு புத்​தகக் காட்சி நடத்​தப்​படு​கிறது. சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்​கப்பட இருந்து கடைசி நேரத்​தில் ரத்​துசெய்​யப்​பட்ட நிலை​யில், அதற்கு எதிர்​வினை​யாக தமிழக அரசு சார்​பில் ஆண்​டு​தோறும் தேசிய அளவில் சிறந்த இலக்​கிய படைப்​பு​களுக்கு ரூ.5 லட்​சம் பரிசுத்​தொகை​யுடன் செம்​மொழி விருதுகள் வழங்​கப்​படும் என முதல்​வர் அறி​வித்​திருப்​பது தேசிய அளவில் கவனம் பெற்​றிருக்​கிறது.

எழுத்​தாளர்​களை தமிழ்ச்​சமூகம் கவுரப்​படுத்த வேண்​டும். அவர்​களை மதிக்க வேண்​டும். எப்​போதெல்​லாம் மொழிகளுக்கு சிக்​கல் வரு​கிறதோ அப்​போது அதற்​கான முன்​னெடுப்​பு​களை செய்​வது நமது வழக்​கம். அந்த வகை​யில் தமிழ் மொழி​யில் மட்​டுமின்றி அனைத்து மொழிகளி​லும் சிறந்த படைப்​பு​கள்வர வேண்​டும் என்​ப​தற்காக செம்​மொழி விருதுகள் அறிவிக்கப்​பட்​டுள்​ளன.

இந்த முன்​னெடுப்பை அனை​வரும் பாராட்​டு​கிறார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார். எழுத்​தாளர் பெரு​மாள்​முரு​கன் ஏற்​புரை​யாற்​றிப் பேசும்​போது, “கடந்த 2015-ம் ஆண்டு நாமக்​கல் அரசு கல்​லூரி​யில் இருந்து மாநிலக் கல்​லூரிக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்ட நிகழ்வு எனக்கு இப்​போது நினை​வுக்கு வரு​கிறது.

அப்​போது எனது நாவலான 'மாதொரு​பாகன்' சர்ச்​சையை எதிர்​கொண்ட கால​கட்​டம். அந்​தச்​சூழலில் நான் மாநிலக் கல்​லூரிக்கு மாறிவரு​வது இங்​குள்ள சில பேராசிரியர்​களுக்​குக்​கூட பிடிக்​க​வில்​லை. சக பேராசிரியர்​கள் என்​னிடம் பேசவே மாட்டார்​கள்.

என்​னைப்பற்றி தவறான கருத்து பரப்​பப்​பட்​டதே அதற்​குக் காரணம். ஆனால், என்​னிடம் பழகிய பிறகு நிலைமை மாறியது. ஒன்​றரை ஆண்​டில் நான் மாநிலக் கல்​லூரி​யில் இருந்​து இடமாற்​றம்​ செய்​யப்​பட்​ட​போது அவர்​கள்​ கண்​கலங்​கினர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT