சென்னை: தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அச்சனா பட்நாயக் இன்று வெளியிடுகிறார். விரைவில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வரவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான எஸ்ஐஆர் பணிகள் முடிந்து டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிச.19 முதல் கடந்த ஜன.30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், ஆட்சேப கடிதம் அளித்து மீண்டும் பெயர் சேர்த்துக்கொள்ளும் பணிகள் நடைபெற்றன.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜன.29-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், "முரண்பாடுகள் என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுகா, துணை பிரிவு அலுவலகங்கள், நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண் டும்" என்று அறிவுறுத்தியது.
அதன்படி, முரண்பாடுகள் பிரிவில் இடம்பெற்ற வாக்காளர்கள் பட்டியல் கடந்த பிப். 7-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீதான மறுப்புரைகளை அளிக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பிப்.16-ம் தேதி வரை 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதிக்கு பதிலாக, 23-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், சென்னை யில் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார். இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.