உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: மதம் மாறியவர்களை பிசி, எம்பிசி, சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் டிச.18-ல் இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை பிசி, எம்பிசி, சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு விசாரித்து, “இந்த வழக்கு தமிழகத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டக் கோட்பாடுகளின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்கி இருப்பதுடன் அரசியலமைப்புச் சட்ட விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
எனவே, வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் இடைக்கால நிவாரணம் வேண்டும் என்றால் அதற்கு தனியாக மனு தாக்கல் செய்யலாம்” என உத்தரவிட்டனர்.
அதன்படி, இடைக்கால நிவாரணம் கோரி கோடீஸ்வரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 4 பிரிவுகளில் காலியாக உள்ள 6,574 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அக்.6-ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜன. 10-ல் நடைபெறுகிறது.
இப்பணியிடங்களில் 26.5 சதவீத பணியிடங்கள் பிசி வகுப்பினருக்கும், 20 சதவீத பணியிடங்கள் எம்பிசி மற்றும் சீர்மரபினர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 200 இடங்கள் கொண்ட தொகுப்பில் 53 இடங்கள் பிசிக்கும், 40 இடங்கள் எம்பிசி மற்றும் சீர்மரபினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு உண்மையில் இப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பல சாதியினர் தொடர்ந்து பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபினர் பிரிவுகளில் தொடர்கின்றனர். இப்பிரிவை சேர்ந்தவர்களின் அரசுப் பணிகளை மதம் மாறியவர்கள் பெறுகின்றனர். இதனால் இடஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படுகிறது.
தற்போதுள்ள அட்டவணையின்படி பிசி, எம்பிசி, சீர்மரபினர் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்பட்டால் என்னைப் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குரூப் 4 பணியிடங்களில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிடவும், நேர்காணல் நடத்தி பணி நியமன ஆணை வழங்கவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க தற்போது அவசியம் ஏற்படவில்லை. குரூப் 4 தேர்வு ஜனவரி மாதம்தான் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை பொதுநல வழக்காக கருதக்கூடாது. எனவே, மனுவை அவசரமாக விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை.
அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்படும். அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்” என கூறப்பட்டது. இதையேற்று விசாரணையை டிச.18-க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்.