எ.வ.வேலு
திருவண்ணாமலை: நெடுஞ்சாலை துறையில் ரூ.2,000 கோடி ஊழல் நடைபெற்றதாக அமைச்சர் ஆதவ்அர்ஜூனா கூறிவரும் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நவ.13-ம் தேதி நெடுஞ்சாலை துறையில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதற்கு நான் ஏற்கெனவே முழு விளக்கம் அளித்துவிட்டேன். நெடுஞ்சாலை துறையில் கோட்ட பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில்தான் பணிகள் நடைபெறும். நான் அமைச்சராக இருந்த காலத்தில் ஒப்பந்தம் செய்யப்படாமல் எந்த பணிகளும் நடைபெறவில்லை. உரிய பதிவேடுகளை பார்த்தால் அது தெரியவரும்.
மேலும், கோட்ட பொறியாளர் தலைமையில் ஒப்பந்தம் முறையாக விடப்பட்டுள்ளதா? கணக்குகள் சரியாக உள்ளதா? என்பதை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் உள் தணிக்கை நடைபெறுகிறது. சாலையோர செடிகள் வெட்டுதல், மரங்களுக்கு வர்ணம் பூசி எண் எழுதுதல், பாலங்கள் சீரமைத்தல், சிறுபாலங்கள் மற்றும் கல்வெட்டுகளின் நீர்வழி பாதைகளை சீரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெறும்.
அரசால் ஒதுக்கப்படும் நிதியில் 80 சதவீத பணம் இப்பணிகளுக்கும், மீதமுள்ள 20 சதவீத பணம் மழை மற்றும் வெள்ளம் போன்ற அவசர காலங்களுக்கும் பயன்படுத்தப்படும். அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்தாலே உண்மை தன்மை தெரியவரும். எனவே, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிவரும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை.
இந்த ஆட்சியே ரீல் ஆட்சி தான், எதையும் திட்டமிட்டு கூறமுடிகிறதா? இவர்கள் ரியல் ஆட்சி நடத்துவது இல்லை, ரீல் ஆட்சி தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள். எங்களால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதனை மக்களோடு மக்களாக இருந்து திமுக தொடர்ந்து செய்து வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.