தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
சென்னை: “தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி கொடுக்காமல் இருக்கக் கூடாது. கிடைத்த விவரங்களை பூர்த்தி செய்து படிவங்களை கொடுத்துவிட வேண்டும். பிஎல்ஓக்களும் படிவங்களை பூர்த்தி செய்ய உதவுவார்கள்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர்களாக இருப்பவர்களை நீக்கும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை (SIR) கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது.
இந்த எஸ்ஐஆர் பணியில் 68,470 பிஎல்ஓக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 2,38,853 பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டு, பிஎல்ஓக்களுக்கு உதவி வருகின்றனர். இதுவரை 6.30 கோடி படிவங்கள் (98%) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் 5.22 கோடி (81%) வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில் 100 சதவீதம் கணினியில் பதிவேற்றி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎல்ஓக்களை, அவர்களின் பணிகளை பாராட்டி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கவுரவித்து வருகின்றனர்.
இப்பணி டிச.4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இறுதிநாள் வரை காத்திருக்காமல், வரும் நாட்களிலேயே படிவங்களை வழங்க வேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என படிவங்களை திருப்பி கொடுக்காமல் இருக்கக் கூடாது. கிடைத்த விவரங்களை பூர்த்தி செய்து படிவங்களை கொடுத்துவிட வேண்டும். பிஎல்ஓக்களும் படிவங்களை பூர்த்தி செய்ய உதவுவார்கள்.
பூர்த்தி செய்த படிவங்களை கொடுக்காவிட்டால், டிச.9-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியிலில் அவர்களின் பெயர்கள் இடம்பெறாது. அதன் பிறகு வடிவம் 6-ஐ கொடுத்து தான் வாக்காளராக சேர வேண்டிருக்கும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.