சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னையில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்.படம்: பிடிஐ

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதையொட்டி, 234 தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

          

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் நடைபெறாமல் தடுக்கவும், விதிமீறல்கள் நடைபெறுகிறதா என்று கண்காணிக்கவும் தலா 2,106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.

தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிந்து, அதிமுகவில் 150 வேட்பாளர்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக, பாமக, தமாகாவிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 30) தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் அங்கு கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து தொகுதிகளிலும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். ஏப்.6-ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் விடுமுறை என்பதால், மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மனுவை வேட்பாளர்கள் இணையவழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்யலாம்.

ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கலின்போது நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6-ம் தேதி கடைசி நாள். 7-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9 கடைசி நாள். வாக்குப்பதிவு ஏப்.23, வாக்கு எண்ணிக்கை மே 4-ல் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT