கண்ணீரோடு நடந்து முடிந்திருக்கிறது சேலத்தில் ராமதாஸ் கூட்டிய பாமக செயற்குழு - பொதுக்குழு கூட்டம். இதில், கூட்டணி முடிவை அறிவிக்கப்படலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், மகனை வசைபாடிவிட்டு கூட்டணி முடிவை சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார் ராமதாஸ்.
கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பதில் தொடங்கிய தந்தை - மகன் மோதல், இப்போது கட்சியை மட்டுமல்லாது குடும்பத்தையும் ரெண்டாக்கி வைத்திருக்கிறது. அன்புமணியும் அவரது மனைவி சவுமியாவும் ஒரு பக்கம் நிற்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ராமதாஸின் பின்னால் நிற்கிறார்கள். ஆனால், கட்சியைப் பொறுத்தவரை, பெருவாரியான நிர்வாகிகளும் எம்எல்ஏ-க்களும் அன்புமணி பக்கமே நிற்பதாகச் சொல்கிறார்கள்.
இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்த பாஜக எடுத்த முயற்சிகளும் தோற்றுப் போன நிலையில், அப்பாவும் பிள்ளையும் இப்போது ஆளுக்கொரு கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அன்புமணியைப் பொறுத்தவரை, பாஜக - அதிமுக கூட்டணி தான் என கிட்டதட்ட முடிவெடுத்து திமுக-வையும் அரசையும் தினமும் திட்டிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட சில காரணங்களால் அவர் தைரியமாக பாஜக-வை விட்டு வெளியில் வரமுடியாத சூழலும் இருக்கிறது. இதையும் மீறி தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை வெடிக்குமானால், அன்புமணியின் அடுத்த சாய்ஸ் தவெக-வாக இருக்கும்.
அன்புமணி பாஜக - அதிமுக கூட்டணியை நோக்கி நகரும் காரணத்தாலேயே ராமதாஸ் அந்தக் கூட்டணியில் இருக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு இருக்கும் முதல் சாய்ஸ் திமுக கூட்டணி. அங்கே கேட்டது கிடைக்காமல் போனால், ராமதாஸுக்கும் தவெக தான் ஆபத்பாந்தவனாக இருக்கும். ”நாங்கள் தான் உண்மையான பாமக, 95 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள், அதனால் எங்களிடம்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்” என்கிறார் ராமதாஸ். ஆனால், கள யதார்த்தம் வேறாக இருக்கிறது.
கடைசி வரைக்கும் பார்த்துவிட்டு இருவரும் ஒத்துவராத பட்சத்தில் அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அணியும், ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக அணியும் தயாராகவே இருக்கிறது. இதில், திமுக-வுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், “பாமக இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என விசிக முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறது. ஒருவேளை, ராமதாஸை கூட்டணிக்கும் சேர்ப்பதாக இருந்தால் விசிக-வை முதலில் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுக-வுக்கு இருக்கிறது. விசிக-வை சங்கடப்படுத்த வேண்டாம் என திமுக நினைத்தால் ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வராமலும் விட்டுவிடலாம்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் பாமக-வின் இரண்டு பிரிவுகளும் ஆளுக்கொரு கூட்டணியில் போட்டியிடப் போகிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாமக-வின் இரு பிரிவுகளும் ஒருசில தொகுதிகளில் எதிரும் புதிருமாக நிற்க வேண்டிய சூழலும் வரலாம். உதாரணத்துக்கு, பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணியை எதிர்த்தும், சேலம் மேற்கில் அருளை எதிர்த்தும் அன்புமணி தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தும். சும்மாவே, காரை மறித்துத் தாக்கு மளவுக்கு தயாரானவர்கள், தேர்தல் களத்தில் எந்த எல்லைக்கும் போகலாம். இதனால், பாட்டாளிச் சொந்தங்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு நிற்கும் பதற்றமான சூழலும் ஏற்படலாம். குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் போட்டுக் குழப்பும் அப்பாவும் பிள்ளையும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா?