தமிழகம்

தட்கல் திட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புக்கு பணம் செலுத்தி 6 மாதமாக காத்திருக்கும் விவசாயிகள்!

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூா்: தட்கல் திட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புக்கு பணம் செலுத்தி 6 மாதங்களாக காத்திருக்கும் விவசாயிகள் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மின் வாரியத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கு விரைவு தட்கல் திட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 356 மின் இணைப்புகள் உட்பட தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இவலச மின் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு, இதற்கான அறிவிப்பு 15.12.2025 அன்று வெளியானது.

அறிவிப்பு வெளியான மறுநாளே 10,000 மின் இணைப்புகளுக்கும் விவசாயிகள் விண்ணப்பித்தனர். 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத்திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் விவசாயிகள் பணம் செலுத்தினர்.

பணம் செலுத்தி 6 மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகள் பலருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: ஆற்றில் நீர் வரத்தில் அவ்வப்போது தடை ஏற்படுவதால் பம்புசெட் மூலம் பாசனம் மேற்கொள்ள திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் செலவில் விவசாயிகள் போர்வெல் அமைத்துள்ளனர்.

இதனிடையே, தட்கல் திட்டத்தில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்தவுடன், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தியுள்ளனர். ஆனால், பணம் செலுத்தி 6 மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.

தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறியது: தட்கல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 356 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த மாதம் வரை 132 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 224 பேருக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT