சென்னை: முழு பயிர்கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து விவசாயிகள் தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கூறுகையில், “வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏற்றம் தரும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இல்லை. முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை தான் நிறைவேற்ற கேட்கிறோம்.
அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும் என கூறியவர் முதல்வர், அவர் முழு கடன் தள்ளுபடி என கூறியதை நம்பி வாக்களித்தோம், வாக்குறுதிப்படி முழு பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு ரூ.4500-ம் கொடுப்பதாக கூறினர், ஆனால் கொஞ்சம் கூட தரவில்லை. கத்தி படத்தில் விவசாயத்தைப் பற்றி நிறைய பேசினார். ஆனால் முதல்வராக எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை” என்றார்