சென்னை: கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, சென்னை எழும்பூரில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் அளித்த உத்தரவாதத்தின்படி, கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்பட 35 விவசாய சங்கங்கள் சார்பில், காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் பொதுச் செயலாளர் ஏஎஸ்பி ரவீந்திரன் கூறியது: “தேர்தலின்போது, வாக்குறுதி அளித்த அப்போதைய முதல்வர் வேட்பாளர், 5 ஏக்கர் உள்ள விவசாயிகளின் கடனை முழுமையாகவும், பெரிய விவசாயிகளின் கடனை 50 சதவீதம் வரையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடியில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளார். எனவே, ஒற்றை கோரிக்கைக்காக 3-வது கட்ட போராட்டத்தை தமிழக விவசாயிகள் நடத்தி கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலில்போது, அரசியல் கட்சி தலைவர்கள், வாக்குறுதிகளை மட்டும் அளித்தனர். ஆனால், தற்போதைய முதல்வர், "இது வாக்குறுதிகள் அல்ல. உத்தரவாதம்" என்று தெரிவித்தார்.
2006-ம் ஆண்டு முதல் மூன்று முதல்வர்கள் கடன்களை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தில் வாடுகிறோம். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிறோம். எனவே, கடன் தள்ளுபடி அவசியம். முதல்வர்கள் அறிவித்த உத்தரவாதப்படி, கடன் தள்ளுபடி வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
முழுமையான விடுதலை வேண்டுமெனில், கடன் தள்ளுபடி விடுதலை வேண்டும். இதை அறிவிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். முக்கிய பொறுப்பாளர்கள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் காவல் துறையின் அழைப்பை ஏற்று, அரசை சந்திக்க பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.
மேட்டூர் அணையில் குறைந்த தண்ணீர் உள்ள நிலையில் திறந்தது வருத்தத்தை அளிக்கிறது. இது யாரோ கொடுத்த தவறான தகவல் அடிப்படையில் திறந்துள்ளனர். மேட்டூர் அணை நீர் மேலாண்மை உணர்ச்சிபூர்வமானது. கலந்தாலோசித்து விவசாயிகள் அனுபவத்தோடு செய்திருக்க வேண்டும். தவறான வழிகாட்டுதல் பேரில், முதல்வர் தண்ணீர் திறந்து உள்ளார்” என்று அவர் கூறினார்.