தூய்மைப்பணியில் ஈடுபட்ட அமைச்சர் வினோத்
கும்பகோணம்: “திருச்சியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இவ்விவகாரத்தில் விவசாயிகள் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறினார்.
திருச்சி சமயபுரத்தில், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் வினோத் கால அவகாசம் கோரியுள்ளார்.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ‘மாசறு தஞ்சை’ என்ற தலைப்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்து, சுத்தம் செய்த பின்னர் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
இங்கு பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும், இங்கு உள்ள பெரும்பாலான கடைகள் பயணிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
திருச்சியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக 40 விவசாய சங்க தலைவர்களுடன் 8 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இன்று 3 அமைச்சர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சந்திக்க உள்ளோம்.
அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். 2028-ல் மகாமகம் நடைபெற உள்ள நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படும்.
கும்பகோணம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பா தாளடி சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் காவிரி நீர் திறந்து வைக்கப்படும். தண்ணீர் குறைவாக இருக்கும் நிலையில் அந்தந்த மாவட்டங்களில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும், அதிக விளைச்சல் தரும் பயிர்கள் குறித்து அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
தொடர்ந்து, தூய்மைக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டபின், துணிப்பை குறித்து விழிப்புணர்வை அமைச்சர் ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரேவதி, மாநகர மேயர் சரவணன், கோட்டாட்சியர் திருமலை, மாநகர ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.