வடகரையில் மழைநீர் தேங்கியுள்ள நெல் வயலில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே புயல்- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் நேற்று மழைநீ்ர் தேங்கிய வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிட்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. கீழ்வேளூர் பகுதியில் மட்டும் 20,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கீழ் வேளூர் அருகேயுள்ள வடகரை ஊராட்சியில் மழைநீர் தேங்கியுள்ள நெல் வயலில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘‘மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்களைக் காப்பாற்றுவதற்கான இடுபொருட்கள் வழங்க வேண்டும்.
கடந்தாண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். நிகழாண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும்’’ என முழக்கங்களை எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை: இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் தட்டுப்பாட்டை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.