

திருவாரூர் அருகே காவனூரில் விளைநிலத்தில் விவசாயிகளின் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீர்.
திருவாரூர்: திருவாரூர் அருகே 5,000 ஏக்கர் விளைநிலங்களில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.
இதனால், காவனூர், கருப்பூர், சூரனூர், சத்தியவாடி, நட்டுவாக்குடி, தைக்கால் உள்ளிட்ட கிராமங்களில் 30 முதல் 40 நாட்களே ஆன 5,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. விளைநிலங்கள் அனைத்தும் குளம்போல காட்சியளிக்கின்றன.
மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், விரைவாக மழைநீரை வடியவைக்க முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் ராஜேந்திரன், தியாகராஜன் ஆகியோர் கூறியது: ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்திருந்தோம்.
கனமழை காரணமாக நெற்பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர் வாராததால்தான் இந்த நிலை ஏற்பட்டது.
தற்போது மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்ய தொடங்கி இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் விரைவாக கணக்கெடுப்பு பணிகளை முடித்து, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றனர்.