ஆவுடையார்கோவில் அருகே வயலில் காய்ந்து கருகிய நெற்பயிர்களை மேய்ந்த மாடுகள்.

 

படம்: கே.சுரேஷ்

தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீரின்றி 1 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கர் வரை சம்பா நெல் சாகுபடி மேற்கொள்வது வழக்கம். ஆனால், போதிய மழை இல்லாததால் சாகுபடி பரப்பு குறைந்தது. இந்நிலையில், மழையளவு குறைவு காரணமாக வறட்சி ஏற்பட்டு அந்த நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டு, மாடுகள் மேயும் இடமாக காட்சியளிக்கின்றன.

பருவமழை கைகொடுக்காததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் விவசாயி செல்வமணி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழையை நம்பி ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நேரடி நெல் விதைப்பு முறையில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது.

அப்போது, தென்மேற்குப் பருவமழை கைகொடுக்காததால் முளைவிட்ட நிலையில் நெற்பயிர்கள் காய்ந்துவிட்டன. அதன்பிறகு மழை பெய்ததைப் பயன்படுத்தி மீண்டும் நெல் விதைப்பு செய்யப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்து மழை பெய்யாமல் அப்போதும் நெற்பயிர்கள் கருகின. மழைநீரை மட்டும் நம்பி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளிலும், மாற்றுப் பாசனத்துக்கு வசதி இல்லாததால் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இதனால், நெல் வயல்கள் தற்போது மாடுகளுக்கான மேய்ச்சல் தரிசாக மாறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழையாலும் காய்ந்துபோன நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாது.

எனவே, 2 முறை விதைத்து, நீரின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து இந்திய ஐக்கிய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பாபருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு வெயில், பருவமழைக் காலத்தில் போதிய மழை பெய்யாதது ஆகியவற்றால் சாகுபடி பரப்பளவு குறைந்தது.

இதை மீறி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் செலவிட்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால், போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் முழுமையாக கருகிவிட்டன. கல்லணைக் கால்வாயில் முறையாக நீர் திறக்காததால் அந்தப் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையாலும் சருகாகிவிட்ட பயிர்களைக் காப்பாற்ற முடியாது. எனவே, தற்போது மழை பெய்வதைக் கவனத்தில் கொள்ளாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் அலுவலர்கள் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்பிறகு அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT