சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் வாட்ஸ்அப் எண் மூலம் புகார் அளிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான ஊக்கத்தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156-ல் இருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131-ல் இருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். அதன்படி நடப்பு கொள்முதல் பருவத்தில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுத்த நிலையான வழிகாட்டுதல் செப்.15-ல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750-க்கும், பொதுரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,600-க்கும் இதுவரை 20,196 விவசாயிகளிடம் இருந்து 1.17 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்யும்போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ புகார் தெரிவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உதவி மையத்தின் 9500801465 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.