புதுக்கோட்டை: அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டு, திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு கிடப்பில் இருக்கும் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஆட்சியிலாவது நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் 2021-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில், முதற்கட்டமாக கரூர் மாவட்டத்தில் 47.2 கி.மீ. , திருச்சி மாவட்டத்தில் 18.89 கி.மீ., புதுக்கோட்டை மாவட்டத்தில் 52.32 கி.மீ. என மாயனூரில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118.5 கி.மீ. தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது.
இதற்காக அப்போது ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த 3 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. அதேபோல, 3 மாவட்டங்களிலும் சுமார் 9 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணியும் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டு, திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், தற்போதைய தவெக ஆட்சியில் கால்வாய் வெட்டி முடிப்பதற்கான பணிகளை மாநில அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தென்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காவிரி-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து கூறியது: இத்திட்டத்துக்கு கால்வாய் வெட்டுவதற்கு அப்போது ரூ.6,900 கோடி தேவை எனத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ஆனால், அதற்கான நிதியை முழுமையாக ஒதுக்கி, கால்வாய் வெட்டும் பணியைத் தீவிரமாக மேற்கொள்ளாமலேயே கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தற்போதைய அரசு தேவையான நிதியை வரும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஒதுக்கி, பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்குத் தமிழக அரசுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிலம் கையகப்படுத்தும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டன. மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டுவதற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மறு திட்ட மதிப்பீடு தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர்கள் மாநாட்டின்போது முதல்வரின் கவனத்துக்கு இத்திட்டம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக எந்த வகையில் நிதியைத் திரட்டி வழங்கலாம் என அரசு ஆலோசித்து வருகிறது. அரசு நிதி ஒதுக்கியதும், அதற்கு ஏற்ப பணிகள் தொடங்கும் என்றனர்.