சீமான் | கோப்புப் படம்.
சென்னை: கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை கொடுங்கோன்மையின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு நள்ளிரவில் கைது செய்துள்ளது கொடும் அதிகார அடக்குமுறையின் உச்சமாகும்.
ஏற்கனவே, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத பெரும் கொடுமையாக அருள் ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து துன்புறுத்திய திமுக அரசு, கடும் எதிர்ப்புக்கு அஞ்சி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப்பெற்ற போதும், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் திரும்பப்பெற மறுத்தது.
கடந்த டிசம்பர் மாதம் திமுக இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக சரளை மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீது பொய் வழக்கு புனைந்து மீண்டும் கைது செய்து திமுக அரசு சிறையில் அடைத்தது
மேல்மா, பரந்தூர், ஓசூர், மதுரை, கடலூர், கோவை என எங்கெல்லாம் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை காக்கவும் வாழ்வாதார உரிமைக்காகவும் போராடுகின்றனரோ அவர்களை எல்லாம் சிறிதும் மனச்சான்று இன்றி கொடுங் குற்றவாளிகள் போல கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
தமிழில் பெயர்ப்பலகை வைக்கவும், தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் என்று பெயர் வைக்கவும், கனிம வளக்கொள்ளைக்கு எதிராகவும் போராடும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை கைது சிறையிலடைக்கும் திமுக அரசு. கரூரில் 41 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை வழக்கு பதிந்து கைது செய்யவில்லை.
தமிழ்நாடு என்ற பெயர் திமுக அரசிற்கு ஏன் அவ்வளவு உறுத்துகிறது? தமிழ்நாடு முதல்வர் என்று குறிப்பிடாமல் வெறும் அரசின் முதல்வர் என்று மட்டும் குறிப்பிடுவீர்களா? நாங்கள் தான் 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் என பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா?
இந்த நாட்டில் உள்ள மதிப்புமிக்க தலைவர்களையும், அவர்கள் வீட்டு பெண்களையும் தரக்குறைவாக விமர்சிக்கும் திமுகவின் வாடகை வாய்களாக செயல்படும் வலையொளியாளர்களை வழக்கும் பதிந்து கைது செய்யவில்லை. பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருள் விற்போர் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகளை கைது செய்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த திறனற்ற திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்குத் தொடுத்து கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் வேளாண்மையும், விவசாயிகளையும் திமுக அரசு பாதுகாக்கும் முறையா? இதுதான் திமுக அரசு மண் காக்கும், மானம் காக்கும் முறையா? பேரவலம்.
‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம் என் பார்க்கும் நிலை’ எனும் வள்ளுவப் பாட்டன் வாக்கிற்குக்கிணங்க பயிர் வளர்த்து உயிர் காக்கும் விவசாயிகளை கொடுஞ்சிறையில் அடைப்பது பஞ்சத்தில் நாடு நாசமாகவே வழிவகுக்கும்.
ஆகவே, கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 விவசாயிகள் மீதான வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற்று, அவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.