தமிழகம்

ரூ.75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் அதிருப்தி

செய்திப்பிரிவு

சென்னை: “மீண்டும் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்ததை போல முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன” என்று தமிழக விவசாயிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர். சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பெரு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பிறகு அவர் அறிவித்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம். உண்ணாவிரதம் உட்பட பல்வேறு வகையான போரட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவு தருவது போலவே ரூ.75,000 ருபாய் வரை பயிர்க் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாகவும், ஒரு லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 35,000 ரூபாய் வரை மட்டுமே தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மீண்டும் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்ததை போல முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன.

ஒருபுறம் விவசாயிகள் உர விலை உயர்வு, வேளாண் இயந்திரங்கள் வாடகை உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, விளை பொருட்களுக்கு கட்டுபாடியாகாத விலை, கால நிலை மாற்றம் உட்பட பல்வேறு வகையான பாதிப்புகளை விவசாயிகள் எதிர் நோக்கியுள்ள நிலையில், இன்றைய முதல்வரின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

முதல்வரின் இத்தகைய அறிவிப்பை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். தமிழக முதல்வர் விஜய் விவசாயிகளை மீண்டும் போரட்ட களத்துக்கு தள்ளிவிட்டு இருக்கிறார். சட்டப்பேரவை தேர்தலில் தமிழக முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் வரை தொடர்ந்து பல்வேறு வகையான போரட்டத்தில் ஈடுபடுவோம்.

ஆக.20-ம்தேதி சென்னை எழும்பூர் எல்ஜி கார்டனில் இருந்து புறப்பட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையை மாநிலத்தலைவர் வேணுகோபால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT