சென்னை: விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி வெளியிட்ட அறிக்கை: கேரள மாநில எம்.பி. ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய நிதித்துறை அமைச்சகம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல் மாநில அரசுகள் எவ்வித கூடுதல் தொகையையும் வழங்கக் கூடாது என்று, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா போன்ற மாநிலங்கள் தற்போது வழங்கி வரும் ஊக்கத் தொகையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். நாடு முழுவதும் 22 விளைபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் எவ்வித தொகையையும் அரசு ஆதரிக்கவில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு என்பது நாடு முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை.
மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் நிலையில், முதலீட்டுக்கான வட்டி, குடும்ப உழைப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கணக்கில் கொள்ளாமல், ஒரு பகுதியை மட்டும் கணக்கிட்டு அறிவிக்கப்படும் விலையால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த இழப்பை ஈடுகட்டவே, அந்தந்த மாநில அரசுகள் தங்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப ஊக்கத் தொகைகளை வழங்குகின்றன. எனவே, விவசாயிகளைப் பாதிக்கும் இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.