

காஞ்சிபுரத்தில் முதியோரின் வீட்டுக்கே சென்று, தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவிக்கும் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேற்று வழங்கினர்.
சென்னை: தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8.65 லட்சம் பேர் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்குச்சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 5 நாட்களுக்குள் தொடர்புடைய தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு 12டி படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 லட்சம் பேர், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,530 பேர், மாற்றுத் திறனாளிகள் 4.63 லட்சம் பேர் என மொத்தம் 8.65 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏதுவாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தகுதியுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை பெற்று வருகின்றனர்.
வீட்டில் இல்லாதவர்களின் வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை செல்ல உள்ளனர்.
2 முறையும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில், அவர் தபால் வாக்களிக்க விருப்பமற்றவராகக் கருதப்படுவார் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஒவ்வொருவரின் வீடுகளுக்கு சென்று, வாக்குச்சாவடி அமைப்பை ஏற்படுத்தி, வாக்களிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.