சென்னை: ரயில்வேயில் நிர்வாக ரீதியாகவும், பயணிகளின் வசதிக்காகவும் பல்வேறு புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ரயில் டிக்கெட் அட்டவணை 4 மணி நேரத்துக்கு முன்பே தயாரிக்கப்படும்போது, பயணிகளுக்கு இருக்கைகள் உறுதி செய்யப்படாத பட்சத்தில், கடைசி நேரத்தில் பயணத் திட்டங்களை ரத்து செய்வதிலோ மாற்று ஏற்பாடுகளைச் செய்வதிலோ, அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
புதிய விதிமுறைகளின்படி, முதல் டிக்கெட் அட்டவணை 9 நேரத்துக்கு முன்பே தயாரிக்கப்படுவதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடியும்.
இந்நிலையில், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் வரையில், ரயில் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: புதிய விதிமுறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாவது முன்பதிவுப் பட்டியலில் இடம் பெறும். காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு, இந்த வசதி கிடையாது. இந்த வசதியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றனர்.