ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது மனைவி க்யோகோ.
திருச்சி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது மனைவியுடன் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது மனைவி க்யோகோவுடன் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
தனியார் விடுதியில் தங்கிய அவர்கள், நேற்று காலை திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு மூலவர், தாயார் உள்ளிட்ட சந்நிதிகளிலும், வைகுண்ட ஏகாதசி பெரு விழாவின் முக்கிய நிகழ்வாக, மோகினி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் சேவைசாதித்த நம்பெருமாளையும் வழிபட்டனர்.
முன்னதாக, அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், மலைக்கோட்டை சென்ற அவர்கள், மாணிக்க விநாயகர், தாயுமான சுவாமி- மட்டுவார்குழலம்மை, உச்சிப் பிள்ளையார் சந்நிதிகளில் தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக கும்பகோணம் புறப்பட்டுச் சென்றனர். நேற்றிரவு கும்பகோணத்தில் தங்கிய அவர்கள், இன்று காலை கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், சுவாமிமலை கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.