சென்னை: தமிழகத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை சிறப்பு செயலர் விவேகானந்தன் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (ஃபிக்கி), இந்திய ஏற்றுமதியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தொழில்வழிகாட்டி அமைப்பு சார்பில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) பயன்படுத்திக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில்
நேற்று நடந்தது.
இதில், தமிழக அரசின் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிகவியல் துறை சிறப்புச் செயலர் விவேகானந்தன் பேசியது: இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும்.
தமிழக ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பங்களிப்பு மட்டும் 45 சதவீதம். மேலும், சென்னை, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கும் மாநிலத்தின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு உண்டு. கடந்த நிதியாண்டில் தமிழகத்தின் ஏற்றுமதி 59 பில்லியன் டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி இலக்கு 72 பில்லியன் டாலராக உள்ளது. எஃப்டிஏ எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்குகள், பயிலரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதனை ஏற்றுமதியாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் ஏற்றுமதியின் பங்களிப்பு மட்டும் ஒரு டிரில்லியன் டாலராகும்.
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஏற்றுமதி வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வர்த்தக சந்தை வாய்ப்பு, தரச்சான்று, ஆய்வக வசதி, பிராண்ட் உருவாக்கம் போன்றவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக கூடுதல் பொது இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ் பேசும்போது, “கடந்த ஐந்தாண்டு காலமாக வர்த்தக துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் நமது ஏற்றுமதி 863 பில்லியன் டாலராக இருந்தது.
தற்போது இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. இதுவரை இந்தியா மேற்கொண்டுள்ள 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் 38 நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அதேநேரம், வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டு்ம்” என்றார். முன்னதாக, தமிழ்நாடு ஃபிக்கி தலைவர் என்.பூபேஷ் நாகராஜன் வரவேற்று பேசினார்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையத்தின் தலைவர் ஜேம்ஸ் ஜெ.நெடும்பாரா, எஃப்டிஏ-வால் உருவாகும் வர்த்த வாய்ப்புகளை எடுத்துரைத்தார். இந்திய ஏற்றுமதியாளர் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிமுகவுரை ஆற்றினார். ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் தலைவர் (பெருநிறுவன விவகாரங்கள்) ஸ்ரீதரன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப அமர்வு நடந்தது.