தமிழகம்

“நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள்?” - பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: “நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்” என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுந்தர்.சி-க்கு கல்வியறிவு குறைவு எனவும் அவருக்கு எதையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மை இல்லை எனவும், அவரின் மனைவி குஷ்பு ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கணையை விட வேகமாக 3 கட்சிகளுக்கு மேல் தாவியவர் எனவும் விமர்சனம் செய்தார்.

          

இந்த விமர்சனத்திற்கு குஷ்பு தனது எக்ஸ் வலைதளத்தில் அளித்துள்ள பதிலில், “தன்னை படித்தவர், அனுபவம் வாய்ந்தவர் என கூறும் திமுக வேட்பாளர் விரக்தியில் பேசிவருவதைப் பார்க்கும்போது அவர் எனது கணவரால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நான் ஏன் திமுகவில் இருந்து விலகினேன் என உங்கள் கட்சி தலைவரிடம் கேளுங்கள். அவருக்கு தெரியாது. ஆனால், 2014 தேர்தலுக்கு முன்பே நான் விலகுவது பற்றி அப்போதைய தலைவரிடம் சொல்லியிருந்தேன். அவர் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.

தேசத்திற்கு சேவை செய்யாமல், கட்சி உறுப்பினர்கள் குடும்பத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சியில் தொடர விருப்பம் இல்லாமல், அந்த கட்சியில் இருந்து விலகினேன். நான் என் தேசத்தை மற்ற எல்லாவற்றையும் விட மேலாகக் கருதுகிறேன்.

ஆனால், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இந்த அரசியல் வாரிசு உறுப்பினரின் விஷயத்தில் பார்க்கும்போது, அவர் தனது தொகுதிக்கு அதிகம் செய்ய நினைத்திருந்தும், அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததால் அவரால் செய்யமுடியவில்லை என அவரே கூறியிருந்தார். உங்களுக்கு பதவியும் அதிகாரமும் முக்கியம் என்பதால், மக்களின் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது கண் தெரியாதவர்களுக்கு கூட தெரியும் அளவில் உள்ளது.

உங்கள் கட்சியில் உள்ள பாதி பேர் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களைப் பார்த்து ஜிம்னாஸ்ட்டிக் வீரர்கள் என கூற தைரியம் உள்ளதா? நான் சுயமாரியாதை, கண்ணிம், நேர்மை ஆகியவற்றுக்காக கட்சி மாறினேன். இதற்காக நீங்கள் என்னை ஜிம்னாஸ்ட் என முத்திரை குத்தினால் அதற்காக நான் பெருமைப்படுவேன்.

நாங்கள் பட்டதாரிகள் அல்ல. ஆனால், மற்றவர்களை மதிக்கும் அளவுக்கு நாங்கள் படித்தவர்கள். நாங்கள் குடும்பப் படிநிலையைப் பற்றிப் பெருமை பேசுவதில்லை. ஆனால் எங்கள் எளிய பின்னணியையும் எங்களுக்குள் புகுத்தப்பட்ட விழுமியங்களையும் பற்றிப் பெருமைப்படுகிறோம்.

உங்கள் அதிகார மிரட்டல், ஆணவபேச்சு, தோல்வியின் வெளிப்பாட்டை காட்டுகிறது. அதற்கு எனது வாழ்த்துகள். அந்த ரூ.30 ஆயிரம் கோடி தொடர்பான வீடியோ வெளியான பின்னர் நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT