திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
சென்னை: கோயில் வழிபாட்டு முறைகள், மதம் சார்ந்த விஷயங்கள், சம்பிர தாயங்களில் செயல் அலுவலர் தலையிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலின் செயல் அலுவலரே தக்காராகவும் இருந்து நிர்வாகம் செய்வதை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.எல்.லட்சுமி நாராயணன் அமர்வு கடந்த மே மாதம் இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலனும், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியமும் வாதிட்டனர். உயர் நீதிமன்றம் கடந்த 1982-ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவு அடிப்படையிலேயே செயல் அலுவலர் தொடர்ந்து பதவியில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு: கடந்த 1982-ல் பிறப்பிக்கப்பட்டது மேல்முறையீடு நிலுவையில் இருந்த காலத்துக்கான இடைக்கால உத்தரவு மட்டுமே. அந்த மேல்முறையீடு 1991-ல் முடிவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவு நீண்ட காலத்துக்கு முன்பே தனது செயல்பாட்டை இழந்துவிட்டது.
எனவே, அதை காரணம் காட்டி கோயில் நிர்வாகத்தை செயல் அலுவலர், தக்கார் மூலம் தொடர்ந்து நடத்த முடியாது. கோயில் நிர்வாகம் அறங்காவலர் குழுவிடமே இருக்க வேண்டும். அறங்காவலர் பதவி காலி யாகும் சூழலில் மட்டுமே தக்கார் நியமிக்கப்படுவார். அதுவும் குறுகிய காலத்துக்கான இடைக்கால ஏற்பாடு மட்டுமே. ஒருவரே செயல் அலுவலர் மற்றும் தக்காராக செயல்படுவது வழக்கமான நிர்வாக நடைமுறையாக இருக்கக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் நிர்வாகத்தில் கண்காணிப்பு, சமநிலை பாதிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின்படி, கோயில் சொத்து நிர்வாகம் தொடர்பான பணிகளை மட்டுமே செயல் அலுவலரிடம் ஒப்படைக்க முடியும். சட்டத்தில் இடம்பெற்றுள்ள 'ஒன்லி என்ற வார்த்தை, செயல் அலுவலரின் அதிகாரத்துக்கு தெளிவான வரம்பை நிர்ணயிக்கிறது. அதன்படி, கோயிலின் மதம் சார்ந்த விஷயங்களில் செயல் அலுவலர் தலையிட முடியாது.
கும்பாபிஷேக் தேதி, நேரம், வழிபாட்டு முறை போன்றவை முழுமையாக மதம் சார்ந்த அம்சங்கள் என்பதால், அதில் தலையிட செயல் அலுவலருக்கு அதிகாரம் இல்லை. கோயிலின் மத நடவடிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகள் அனைத்தும் அந்தந்த கோயிலின் பழக்க வழக்கங்கள், மரபுகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.