குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கிய மத்திய தொல்லியல் துறையினர். (அடுத்தபடம்) குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள உயரமான நடுகல்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குமரிக்கல்பாளையம் கிராமத்தில், இந்தியாவிலேயே மிக உயரமான 27 அடி உயர நடுகல் அருகே, அகழ்வாய்வுப் பணிகளை இந்திய தொல்லியல் துறை தொடங்கியது.
2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான நாட்டிலேயே மிக உயரமான நடுகல், திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையத்தில் இருப்பதால், அந்த பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரலாற்று ஆய்வாளர்களும், கிராம மக்களும் கடந்த 2023 முதல் 2025 வரை 736 நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
மேலும், அகழாய்வுப் பணிகளை தொடங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதத்தில் 7 நாள் தொடர் காத்திருப்புப் போராட்ட மும் நடந்தது. இதன்பின், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர், குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு செய்ய வலியுறுத்தி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கடந்த ஜன. 17-ல் மனு அளித்தனர்.
இதற்கிடையே, 27 அடி உயர நடுகல் அருகே இரும்பு, முதுமக்கள் தாழி, பானைகள், பானை ஓடுகள், எலும்புத்துண்டுகள் என தொல்லியல் எச்சங்கள் நிறைந்த இந்தப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என குமரிக்கல் தொல்லியல் பாதுகாப்பு சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், அகழ்வாராய்ச்சிப் பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கி உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் (பொ) அரவாழி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறையினர் தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடுகல்லில் இருந்து 100 - 150 மீட்டர் தொலைவுக்கு அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில்,கிடைத்த ரோமானிய வர்த்தகத்துக்கான ஆதாரங்கள், மட்பாண்டத் துண்டுகள், இரும்பு கசடுகள், பிற தடயங்களை, இந்திய தொல்லியல் துறை பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரவாழி கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த கொடுமணலில் இருந்து வெறும் 15- 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அகழ்வாராய்ச்சிக்கான இடம், ரோமானிய வர்த்தகத்துக்கான வலுவான சான்றுகளை வெளிப்படுத்தும். தொன்மையான நடுகல் அருகே ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் மூலம் பெருங்கற்காலம், வரலாற்று காலத்துக்கான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அகழாய்வுகளின் முடிவில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க, தொல்லியல் துறை காத்திருக்கிறது” என்றார். இதன்தொடர்ச்சியாக குமரிக்கல்பாளையத்தில் ஆய்வுப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.