பழநி: இதேநிலை நீடித்தால் அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசியதைப் பார்த்தோம்.
அரசியல் நாகரிகம் என்று கூறினாலும், இதுவரை அதிமுக கடைப்பிடித்து வந்த கலாச்சாரத்திற்கும் வழிமுறைகளுக்கும் இது நேர் முரணானது. இதனை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்துத் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கட்சியின் உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத ஒருவர் பொதுச்செயலாளராக இருக்கிறார். திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்களோ என்று மக்கள் சந்தேகப்படும் அளவுக்கு நெருக்கம் காட்டுகிறார்.
தோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல், நாளுக்கு நாள் கட்சியை தேய்த்துக் கொண்டிருக்கிறார். தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற தன்னம்பிக்கையை அவர் ஏற்படுத்தவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகிய 6 பேரும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கே நேரில் சென்று, 'நீங்களே பொதுச்செயலாளராகவும் முதல்வர் வேட்பாளராகவும் இருங்கள்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் அரவணைத்துச் செல்லுங்கள், யாரையும் நீக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அதைக் காதிலேயே வாங்காத அவர், எங்கள் 6 பேரையும் எதிரிகளாக நினைத்து நீக்கினார்.
இப்போது தாழ்வு மனப்பான்மை மற்றும் பயத்தின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்களையும், கோவை மாவட்டத்தில் வேலுமணிக்கு வேண்டிய 300 கிளைச் செயலாளர்களையும் நீக்கியுள்ளார். நீக்கி நீக்கிப் பழகியவர், ஒருநாள் மறந்தவாக்கில் தன்னையே கட்சியிலிருந்து நீக்கிக்கொள்வார் போலிருக்கிறது.
அனைவரையும் அரவணைத்துத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி திருந்துவது போல் தெரியவில்லை. இதே நிலைமையில் அவர் சென்றால், அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.