எ.வ.வேலு

 
தமிழகம்

திமுக மாநாட்டுக்காக ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ.வேலு மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்ததால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மனு தாக்கல் செய்துள்ளார்.

‘திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி, திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசுக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’ என அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை இல்லாமல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரி இருவர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், முதல் தகவல் அறிக்கை இல்லாமல், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, சட்டவிரோதமாக ஏரி மண் எடுத்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு, அவரது மகன் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT