தூத்துக்குடி மாவட்ட ‘சமத்துவ மக்கள் கழகம்’ கட்சி மற்றும் நாடார் பேரவை சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா சமத்துவ மக்கள் கழகம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் பேசும்போது, “அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனவே, இப்போதே நாம் உழைக்க வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எம்.அற்புதராஜ் கூறுகையில், “கடந்த தேர்தலில் எங்களுக்கு திமுக கூட்டணியில் சீட் ஒதுக்கவில்லை. இம்முறை நிச்சயம் சீட் கிடைக்கும்” என்றார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி திமுக கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது, அக்கட்சியின் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில், தான் போட்டியிடப் போவதாக எர்ணாவூர் நாராயணன் தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் மகேந்திரன் கூறுகையில், “இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்குதான் ஒதுக்கப்படும். தொகுதியில் நிரந்தரமாக குடியிருக்கும் நபருக்கே சீட் கொடுக்க வேண்டும்” என்றார்.