தமிழகம்

“மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வாக்குறுதி அளித்தது அதிமுக தான்” - பழனிசாமி

எஸ்.விஜயகுமார்

சேலம்: மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வாக்குறுதி அளித்தது அதிமுக தான் என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் கேக்கை மகளிர் அணியினருக்கு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஏற்காடு எம் எல் ஏ சித்ரா, அதிமுக மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். .

          

பின்னர், செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியது: “மகளிர் உரிமைத் தொகை ரூ 2,000 ஆக உயர்த்தி வாக்குறுதியில் நான் அறிவித்திருந்தேன். இதைத் தான் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இலவசம் கூடாது என்ற விஜய் தற்போது இலவசங்களை அறிவித்திருப்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தரும். எங்களது கட்சியும் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன செய்தோம் எனத் தெளிவாக ட்விட்டரில் விளக்கி உள்ளோம். அதன்படி, அதிமுக ஆட்சி அமைந்ததும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

‘அம்மா இருசக்கர வாகனம்’ தரப்படும் என அறிவித்து இருக்கிறோம். 5 லட்சம் மகளிருக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். அவற்றை செய்வோம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்தை பகிர்ந்த இபிஎஸ், “எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்! ​ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை.

இதனை உணர்ந்துதான் ஜெயலலிதா பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார். ​இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை! ​

அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும். பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும். ​

மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் , தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும், மீண்டும் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT