‘வின்னர்’ திரைப்படத்தில் வரும் ‘கட்டதுரை திருந்துவது மாதிரியே இல்லை’ என்ற வசனத்தைக் கூறி நாகை பொதுக் கூட்டத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுவாரசியமாக்கினார்.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: புதுக்கோட்டையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு எதையும் சொல்லவில்லை. என்னைப் பற்றி என்னவெல்லாம் அவதூறு பேச முடியுமோ அவ்வளவு பேசி இருக்கிறார்.
எங்கள் கட்சி பாஜகவுக்கு அடிமை என்கிறார். ஆனால், அதிமுக தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது. ‘வின்னர்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சியில் ஒரு வசனம் இருக்கும்.
‘கட்டதுரை திருந்துவது மாதிரியே இல்லை’ என்று ஒரு வசனம் வரும். அதேபோன்ற நிலைமைதான் இப்போது இருக்கிறது. அதைப்பற்றி நான் அதிகம் பேசுவது நாகரிகமாக இருக்காது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக பேசுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் தனித்தனியாக நிற்கிறார்கள். மக்களை ஏமாற்றும் இந்த நாடகம் ஒருபோதும் எடுபடாது. மக்களை குறைத்து எடை போடாதீர்கள். மக்கள் அறிவு கூர்மையானவர்கள். எது சரி தவறு என்று சிந்தித்து முடிவு எடுக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள்.
பழனிசாமி சாதனைகளைப் பற்றி பேசுவதில்லை, அவருக்கு கொள்கை கிடையாது என்று முதல்வர் பேசியிருக்கிறார். அதிமுக அரசில் குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் குறுவைக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரவில்லை. திமுகவின் சாதனை, 4 ஆண்டுகளில் ஊழல் செய்தது தான்.
நான் ஏற்கனவே சவால் விட்டிருக்கிறேன். இப்போது, அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு சொல்கிறேன். ஸ்டாலின் முதல்வர் ஆனபிறகு என்னென்ன சாதனைகள் என்று செய்திருக்கிறோம் என்று சொல்லட்டும். மக்களிடம் விளக்குங்கள். மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்தோம்.
ஸ்டாலினின் 5 ஆண்டு ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியை கூட கொண்டு வர முடியவில்லை. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 27 பாலிடெக்னிக் கல்லூரிகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 4 வேளாண் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவ கல்லூரி, 1,200 கோடியில் மிகப்பெரிய கால்நடை பூங்கா கொண்டு வந்தோம்.
முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். பள்ளிவாசலுக்கு நோன்பு காலத்தில் அரிசி கொடுத்தது அதிமுக அரசு. ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்பட்டது. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. இருசக்கர வாகனம் வாங்க மானியம் தரப்பட்டது. கண்ணை இமை காப்பது போல, சிறுபான்மை மக்களை நாங்கள் காப்போம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.