அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய பொதுச் செயலாளர் பழனிசாமி. படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

“தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்” - 55-வது ஆண்டு தொடக்க விழாவில் பழனிசாமி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்’ என்று கட்சியின் 55-வது ஆண்டு தொடக்கவிழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்கவிழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மகளிரணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக கொடியை ஏற்றிவைத்து, தொண்டர் களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சட்ட பட்டப்படிப்பு படித்துவரும் சஞ்சய் செந்தில்நாதன் எழுதிய, ஜென்சி தலைமுறையினருக்கு அதிமுகவின் வரலாற்றை கொண்டுபோய் சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘திராவிடியன் ஃபீனிக்ஸ்' என்ற நூலை பழனிசாமி வெளியிட்டார். பின்னர், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், திருவல்லிக்கேணி மேற்குப் பகுதி, கிழக்கு வட்டக் கழகச் செயலாளர் எம்.கே.மாறன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பழனிசாமி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: எம்ஜிஆரால் 1972-ம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட அதிமுக, தற்போது 55-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்து, பொன்விழாகண்ட கட்சி, பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கிய கட்சி அதிமுக. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் சோதனைகளைச் சந்தித்து, அவற்றைப் படிக்கட்டாக்கி ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்தனர்.

அதுபோல தமிழகத்தில் மக்கள் துணையோடு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். அதற்காக தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இரவு, பகல் பாராமல் தேனீக்கள், எறும்புகளைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்கள் பணியாற்றுவோம் என இந்த நன்னாளில் சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை எம்பி, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, ஓ.எஸ். மணியன், ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சண்முகம், வேலுமணி புறக்கணிப்பு: அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி: அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் திமுகவில் இணைந்து, உதய

சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். டிடிவி தினகரன் தனிக்கட்சி நடத்தி வருகிறார். அதேபோல், 2026 தேர்தலில் சசிகலா தனிக்கட்சி தொடங்கி, பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இவர்களை எல்லாம் எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறும் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் வாக்களித்தார். அமைச்சராக முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியால், அதிமுகவை பலவீனப்படுத்த ஒருசிலர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். பழனிசாமி தலைமையை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களை வரவேற்க அவர் தயாராக இருக்கிறார்’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT