சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேட்டி அளித்தார்.படம்: ம.பிரபு
‘தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்களால் நிறைந்த உரையாக இருக்கிறது’ என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக அரசு தாக்கல் செய்த 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், கடந்த 5 ஆண்டுகளைப்போல வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, மேனா மினுக்கி உரையாகத்தான் இருக்கிறது. கடந்த 2025-26 நிதியாண்டு வருவாய் வரவுகளில், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.2.58 லட்சம் கோடி என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.2.32 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதைப்பற்றி எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் 2025-26-ம் ஆண்டுக்கு ரூ.66,753 கோடி செலவிடப்படும் என கணித்த நிலையில், ரூ.51,442 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் நிதியமைச்சர் விளக்கவில்லை.
இவ்வாறு நிதி பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றால், அதை ஈடு செய்ய மக்கள் மீதான வரிச்சுமை கூடும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரகுராம் ராஜன் தலைமையில் நிதி மேலாண்மைக் குழு அமைத்து மாநில நிதிநிலை சீர்செய்யப்படும் என்றனர். ஆனால், இந்த நிபுணர் குழு அமைத்த பிறகுதான் அதிக கடனை தமிழகத்தில் வாங்கியுள்ளனர். இன்றைய மாநில பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்களில் ஏறத்தாழ 5 மணி நேரம் பேசிய 2 அமைச்சர்களின் உரையில், வரவு செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை.
‘அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும், புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும்” என்பதைப்போல் அமைந்திருக்கிறது திமுகவின் பட்ஜெட். அதேபோல் 2021 தேர்தலில் திமுக வெளியிட்ட 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே நிறைவேற்றியுள்ள நிலையில், அதில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக சொல்வது முற்றிலும் பொய். இதற்கெல்லாம் விரைவில் விடிவுகாலம் வரும். அந்த வகையில், சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.