காஞ்சிபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக கூட்டணி ஒரு கேலிக்கூத்தான கூட்டணி என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், உத்திரமேரூர் வேட்பாளர் பெ.மகேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் பழனி ஆகியோரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் நிலவியது. ஆனால், கட்சிக்குள் இருந்த சிலரே திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு சூழ்ச்சி செய்து ஆட்சி அமைவதைத் தடுத்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி மூலம் அடையாளம் பெற்றவர்கள், தற்போது வெட்கமே இல்லாமல் எம்.ஜி.ஆரால் 'தீய சக்தி' என வர்ணிக்கப்பட்ட திமுகவில் இணைந்து துரோகம் செய்துள்ளனர்.
திமுக-காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை 20 நாட்கள் இழுபறியாக நீடித்தது. ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். ஆனால் அதிமுக கூட்டணி மிகவும் சுமுகமான முறையில் உடன்பாட்டை எட்டியது. இது ஒரு இயற்கையான கூட்டணி. திமுக கூட்டணியில் மதிமுக அவைத் தலைவர் ‘அழுதுகொண்டே சிரிக்கிறோம்’ என்கிறார்.
கம்யூனிஸ்டுகள் கடந்த முறை வெற்றி பெற்றும் மக்கள் பிரச்சினையைப் பேசாமல் திமுகவுக்கு ஜால்ரா போட்டதால், இந்த முறை அவர்களுக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது. விசிக வேட்பாளர் தன்னை ஒரு காங்கிரஸ்காரர் என்கிறார். இப்படி திமுக கூட்டணி ஒரு 'கேலிக்கூத்தான கூட்டணியாக' உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார். நான் யார் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு விஷயத்தைச் சொன்னால், ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல தன்னைச் சொன்னதாக எடுத்துக் கொள்கிறார். அவரது நெஞ்சில் உள்ள குற்றம் புரிகிறது. ஒரு நடிகையின் ஆசைக்காகப் பல கோடி அரசுப் பணத்தைச் செலவழித்து சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கார் ரேஸ் நடத்தியதைத் தவிர உதயநிதி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?
2021 தேர்தலிலேயே மகளிருக்கு ரூ. 1,500 வழங்கப்படும் என அதிமுக அறிவித்தது. அதை ஸ்டாலினுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றாலும், உதயநிதியாவது படித்துப் பார்க்கட்டும். அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் தான் தற்போது மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உரிமைத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
கரோனா காலத்தில் நிதி நெருக்கடி இருந்தபோதும் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மக்களைக் காத்தோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். உயர்கல்வியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றினோம். ஸ்டாலின் அதிமுக ஆட்சியை இருண்ட காலம் என்கிறார். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் உலகம் இருட்டாகத் தெரியும்.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது அது சரியாகத் தெரிந்த அவர்களுக்கு, அதிமுக வைத்தால் மட்டும் தவறா? ஏமாற்றுவதற்கு ஒரு குடும்பம் உண்டு என்றால் அது கருணாநிதி குடும்பம் தான். மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.