சென்னை அம்பத்தூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசினார்.

 
தமிழகம்

“வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை பறிமுதல் செய்வோம்” - பழனிசாமி ஆவேசம்

செய்திப்பிரிவு

வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, அதில் மக்களுக்காக திட்டங்களை கொண்டு வருவோம் என்று சென்னை அம்பத்தூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பயணத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கினார். 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 69-ஆம் நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது: மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பழனிச்சாமி துரோகி என்று தெரிவித்துள்ளார்.

          

உண்மையில் ஸ்டாலின் தான் துரோகி. தன் குடும்ப நலனுக்காக பணியாற்றுகிறார். வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாத ஸ்டாலின் தான் துரோகி. ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்துக்கு தான் பலன் கிடைத்தது. இளைஞர்களை, மாணவர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின். கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி.

நான் சட்டப்பேரவையில் இரண்டரை மணி நேரம் பேசினேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்துகொண்டார். இதுபோன்ற திறனற்ற முதல்வரால் தமிழகம் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

நான் பதவியேற்ற போது கடும் வறட்சி. டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டது. கரோனா பாதிப்பும் வந்தது. இருப்பினும் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு கொடுத்தோம். 12 மாதங்கள் நியாவிலைக் கடைகளில் அனைத்து பொருட்களையும் கொடுத்தோம். திறமையாக எதிர்கொண்டோம். அதனால் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என மக்களால் போற்றப்படுகிறது.

ஆனால், திமுக அரசு டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வாங்கி, 5 ஆண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி ஊழல் செய்த அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் திட்டங்களுக்கு பெயர் வைப்பது மட்டும் தான். எல்லாமே பொய்யான விளம்பரம். ரெய்டுக்கு பயப்பட மாட்டோம் என்கிறார். உங்களுக்கு பயம் வந்து விட்டது. நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் ஒரு அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த பயத்தில் தான் மதுரையில் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார்.

நகராட்சி நிர்வாகத் துறையில், பணியிடங்களை நிரப்ப, ஒரு இடத்துக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வாங்கியுள்ளனர். அந்த முறைகேட்டை கண்டறிந்துள்ளனர். பல்வேறு பணிகளுக்கு கமிஷன் வாங்கப்பட்டதாக ஆதாரத்தோடு அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. ஊழல் செய்த பணத்தை அந்த அமைச்சர் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கிறார். திமுக அரசு ஊழல் நிறைந்த அரசுக்கு என்பதற்கு இதுவே சான்று.

மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சி மலரும். வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, அதில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவோம். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், ஊழல் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மக்களுக்காக சேவை செய்த கட்சிகள். இந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT