சென்னை: சிங்கப்பெண் சிறப்பு படைக்கே பாதுகாப்புக்கு இன்னொரு படை அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்று முதல்முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் உரையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், மாற்றம் எதுவுமில்லாமல் ஏமாற்றம் தான் மக்களுக்கு மிச்சமாகி இருக்கிறது. ‘கனவில் போடப்பட்ட மாக்கோலம்’ ஆக ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 150 போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான 126 பாலியல் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றை தடுக்க அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு படைக்கே பாதுகாப்புக்கு இன்னொரு படை அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவெக கூட்டணியில் உள்ளனர். இதை பயன்படுத்தி கர்நாடக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெற்றிருந்தால் மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்திருக்கலாம். அதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதற்கிடையே அடிக்கடி மின்வெட்டு.
கேட்டால் பியூஸ் கேரியர் திருட்டு போகிறது என்கின்றனர். தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு பதிலாக காரணங்களை சொல்லி கொண்டு இருக்கின்றனர். எனது மகன் மிதுன், அரசியலுக்கு வருவதை பற்றி தொடர்ச்சியாக பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது தவறு. எனது மகன் மிதுன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கிறார்.
கட்சியில் எந்த பதவியிலும் அவர் இல்லை. எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய இருப்பதாக வரும் செய்திகள் பற்றி அவரிடம் தான் கேட்கவேண்டும். அதிமுக தலைமை சரியாக இருந்த காரணத்தால் தான் சி.வி.சண்முகத்தால் வெற்றிபெற முடிந்தது.
பாமக தயவால் தான் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றிருப்பதாக கூறும் அவர், ஏன் 2021 தேர்தலில் விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் தோற்றார்? விழுப்புரம், பாமக வலிமையாக இருக்கிற இடம் தானே. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பேசுகிறார். அதிமுக செயற்குழுவில் 272 பேர் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளுடைய ஆலோசனை பெறப்பட்டு பிறகு செயற்குழு, பொதுக்குழு கூட்டப்படும். எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற சரித்திரம் இல்லை. மக்களுடைய செல்வாக்கு அதிமுகவுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.